மதுர மதுரம் ஸ்ரீ ராம நாமம்
பகவான் ஸ்ரீ மந் நாராயணன், த்ரேதா யுகத்தில், ராமபிரானாக, அயோத்திய அரசர் தசரதனுக்கும் கௌசல்யைக்கும் சித்திரை மாதம், நவமி அன்று, புனர்வசு நக்ஷத்திரத்தில் மகனாகப் பிறந்தார். அத்திருநாளையே ராம நவமி என்று நாம் கொண்டாடுகிறோம்.
தர்மத்தின் படி வாழ்ந்து காட்டியவர் ராமபிரான். நீதி வழுவாது ஆட்சி புரிந்து, மக்களுக்கு நன்மை பல செய்தார்.
"ராம" என்ற நாமமே நன்மை அளிக்க வல்லது. ராம நாமம் எப்படி தோன்றியது என்று பார்ப்போம். அஷ்டாக்ஷர மந்திரமாம் ஓம் நமோ நாராயணாய என்பதில் இருந்து ரா என்ற அக்ஷரமும், பஞ்சாக்ஷர மந்திரமாம் நமசிவாய என்பதில் இருந்து ம என்ற அக்ஷரமும் ஒன்று சேர்ந்து ராம என்ற நாமத்தைத் தந்தது. வேடன் ஒருவன் காட்டில் திரிந்து கொண்டு, வருவோர் போவோரை வறுத்தியெடுத்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த நாரதர், "உனக்கு உய்ய ஒரு வழியைச் சொல்கிறேன். கேள்." என்றார். அவனும் சரி என்று சொல்ல, " 'ராம ராம'" என்று சொல்லிக்கொண்டே இரு. இவ்வழியாக ஒரு நாள் பகவான் ஸ்ரீ மந் நாராயணன் வருவார். உனக்கு ஒரு வழி தருவார்." என்றார். வேடனுக்கு ராம என்று வரவில்லை. அவன் நின்றுகொண்டிருந்த மரத்தின் பெயர் என்ன என்றார் நாரதர். மரா என்றான் வேடன். அதையே சொல்லிக்கொண்டு இரு என்றார். சரி என்று "மரா மரா மரா மரா" என்று வேடன் சொல்ல, ராம என்று ஒரு கட்டத்தில் அந்த நாமா அவன் வாயிலும் வந்தது. அந்த வேடன் வேறு யாரும் அல்லன். ஸ்ரீ மத் ராமாயணம் இயற்றிய வால்மீகி முனிவர். ராம நாம மகிமையால், வேடன், முனிவராக மாறி, தர்ம சரிதத்தை இயற்றினார்.
ராமன் வரும் முன்னமே ராம நாமம் வந்துவிட்டது. ராமனைக் காட்டிலும் ராம நாமம் சக்தி வாய்ந்தது என்றும் கூறுவர். சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்ல, ராமபிரான், கடலில் பாலம் கட்டினார். ஆனால் ஆஞ்சனேயனோ, "ராம் ராம்" என்று சொல்லி, கடலையே தாண்டிவிட்டார். நாமும் ராம என்று அவன் நாமத்தைச் சொன்னால், சம்சாரம் என்னும் கடலைத் தாண்டிவிடலாம்.
மதுர மதுரம் ஸ்ரீ ராம நாமம், ராம நாமமே கல்கண்டு, ராம நாம பாயசகே, ஓ ராம நீ நாமம் எந்த ருசி என்றெல்லாம் அருளாளர்கள் நாமத்தின் சுவையைப் பாடியுள்ளனர். ராமனின் நாமமே தாரக நாமம், ராம நாமமு ஜென்ம ரக்ஷக மந்த்ரம், ராம நாம மனே வர கட்க மீவி (ராம நாமமே துயரை அறுக்கக்கூடிய வாள்) என்றெல்லாம் அவ்வருளாளர்கள் நாமத்தின் மகிமையைப் பாடியுள்ளனர்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், பார்வதி தேவி, பரமேஸ்வரரிடம் கேட்கிறாள், "பண்டிதர்களால் கடினமான ஸ்லோகங்களைச் சொல்லி ஈடேற முடியும். பாமரர்கள் என்ன செய்வது?" என்று. அதற்கு, ஈஸ்வரர் கூறும் பதில், "ராம ராம ராம" என்று சொன்னாலே போதும். எவரும் ஈடேறலாம். ஆயிரம் நாமமும் இதில் அடக்கம்" என்றார்.
பார்வத்யௌவாச:
கேனோ பாயேன லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம்
ஷ்ரோத்துமிச்யாம்யஹம் ப்ரபோ
ஈஸ்வரௌவாச:
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம
நாம வரானனே
இந்தக் கலியுகத்தில் ராம நாமத்தை ஜெபித்து, ராமனிடம் பக்தி செலுத்தி, அவனைக் கண்ட மஹான்கள் ஸ்ரீ தியாகராஜர், பத்ராசல ராமதாசர், சமர்த்த ராமதாசர் போன்றோர்.
ராம பக்தி சாம்ராஜ்ய என்று பாடுகிறார். ராம பக்தியைத் தவிர வேறு சாம்ராஜ்யம் வேண்டுமா? என்று கேட்கிறார். ராமனின் சரிதத்தைக் கேட்பது அம்ருத ரசத்தைப் பருகுவது போல் என்று பாடுகிறார். ராம கதா சுதாரச பான... என்கிறார். ராமனின் சரிதம் எதைத்தான் தராது என்று ஒரு பட்டியலையே போட்டுக் காட்டுகிறார் ஸ்ரீ தியாகப்ரும்மம். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற புருஷார்த்தங்கள் மற்றும் தைர்யம், ஆனந்தம் போன்ற எண்ணற்ற நற்பலன்கள் என்று பாடுகிறார்.
கம்பரைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. தமிழில் அழியாப்புகழ் கொண்ட ராமாயணத்தை எழுதியவர். அவர் சொல்வது
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாபமும்
சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித்
தீருமே
இம்மையே ராமா என்ற
இரண்டெழுத்தினால்.
பன்னிரு ஆழ்வார்களில் குறிப்பாக குலசேகர ஆழ்வார் ராமனை அதிகம் பாடியுள்ளார்.
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே என்று தொடங்கும் திருக்கண்ணபுரப் பாசுரம் மிகவும் ப்ரசித்தி பெற்ற ஒன்று.
அருணகிரிநாதர், தனது திருப்புகழ்ப் பாடல்களில் முருகனை அழைக்கும் போது, பல இடங்களில் திருமாலின் அவதாரங்களையும் அவர் செய்த லீலைகளயும் பாடி பின்னர் அப்படிப்பட்ட திருமாலின் மருகோனே என்று பாடுவார். கௌசல்யா ராமனை எப்படி அழைத்திருப்பாள் என்று ஒரு பாடலில் பாடுகிறார். அதனை அனுபவிப்போம்.
எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என் கண் வருக எனது ஆருயிர் வருக
அபிராம இங்கு வருக அரசே வருக
முலை உண்க வருக மலர் சூடிட வருக
நாமும் ராமபிரானை வருக என்று இந்த நன்னாளில் வரவேற்று வணங்குவோம்.
ஜெய் ஸ்ரீ ராம்!
- ஸ்ரீமதி சரண்யா விஸ்வநாத், சென்னை.
கருத்துகள்
கருத்துரையிடுக